×

உலக அளவில் சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேச்சு

சென்னை: சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி யுனிசெப் நிறுவனம் சார்பில் வருங்கால இந்தியாவில் இளைஞர்களின் பங்கு குறித்த கருத்தரங்கம் ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. யுனிசெப் இந்திய பிரதிநிதி சிந்தியா மெக்காபரி முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேசியதாவது: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்களை அதிகமாக கொண்டுள்ள நாடாக இந்தியா திகழ்கிறது.

இளைஞர்களிடம் அளவிட முடியாத ஆற்றல் குவிந்து கிடக்கிறது. அதைச் சரியாக பயன்படுத்தி, நாட்டுக்கும், உலகிற்கும் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் எண்ணற்ற சவால்களை இளைஞர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அவற்றை கூட்டு முயற்சியால் வெல்ல தயாராக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், தெற்காசிய பகுதி முழுமைக்கும் இளைஞர்கள் தொண்டாற்ற வேண்டும். உங்களிடம் முயற்சியும் நம்பிக்கையும் இருக்குமாயின் அதற்கான வழியும் பிறக்கும்.

உலக நாடுகள் 2030ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத உலகை உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதனை 2025க்குள் நிறைவேற்ற இந்தியா இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இந்தியா ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளது. உலகமே ஒரு குடும்பம் என்ற கருப்பொருளுடன் பல்வேறு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், தண்ணீர், மின்சாரம், பெட்ரோல், டீசல் பயன்பாட்டினை சிக்கனப்படுத்தினால் அதன்மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க பெரும் பங்கேற்பாய் இருக்கும். கோவிட் தொற்று காலத்தில் இந்தியா தனது மக்களுக்கு மட்டுமல்லாமல், 160 நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்கி சாதனை படைத்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகிலேயே முன்னணி நாடாக இந்தியா உள்ளது. உலக அளவில் 41 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடக்கிறது. உலக பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் அது 3வது இடத்துக்கு முன்னேறும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விடுதலைப் போராட்ட வீர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் எனது மண் எனது தேசம் என்ற இயக்கத்தை பிரதமர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு கிராமத்திலும், சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை குறிக்கும் வகையில், 75 மரக்கன்றுகளை நடுவதில் இளைஞர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும்.

The post உலக அளவில் சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Anurak Singh Dakur ,Chennai ,International Youth Day ,India ,Unicep Institute ,Alandur G. ,S.S. ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...